சென்னைக்கு மிக அருகே! கோடை வெப்பத்தை தணிக்க சிறந்த 5 நீர்வீழ்ச்சிகள்

ஒரே நாளில் சென்று வரக்கூடிய சென்னையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிரதான நீர்வீழ்ச்சிகளை தெரிந்துகொள்ளுங்கள். விடுமுறையில் குடும்பத்துடன் சென்று உற்சாக குளியல் போடுங்கள்.

best waterfalls near chennai

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கோடை வெயில் தீவிரமடைந்து இருப்பதை அனைவரும் நன்கு அறிவோம். காலை மற்றும் இரவு நேரங்களில் குளித்து, ஏசி போட்டு மூன்று லிட்டர் தண்ணீர் மற்றும் ஜூஸ் குடித்து நீரேற்றமாக இருந்தாலும் வீட்டில் அடிக்கும் வெக்கை நம்மை குளிர்ந்த பிரதேசத்திற்கு ஓடிவிடலாமோ என தோன்ற வைக்கும். ஆனால் அதற்கான தேவை எதுவும் இல்லை. சென்னை சுற்றி 100 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு நாளில் சென்று வரக்கூடிய பல நீர்வீழ்ச்சிகள் உள்ளன. எந்த சீசனாக இருந்தாலும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். கூட்டத்தை பொருட்படுத்தாமல் சனி, ஞாயிறுகளில் குடும்பத்துடன் சென்று உற்சாக குளியல் போடுவதற்கான நீர்வீழ்ச்சிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

tada waterfalls

தடா நீர்வீழ்ச்சி

சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. புழல் - கும்மிடிப்பூண்டி வழியாக தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி இந்த நீர்வீழ்ச்சியை அடையலாம். உப்பலமடுகு என்றும் இந்த நீர்வீழ்ச்சி அழைக்கப்படுகிறது. இங்கு பைக், கார் பார்க்கிங் வசதி உண்டு. மெயின் ரோட்டில் இருந்து உள்ளே செல்வதற்கான பாதை சற்று கரடு முரடாக இருக்கும். வெளியே உள்ள சின்ன கடையில் நீங்கள் தண்ணீர் உட்பட தின்பண்ட பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். உள்ளே ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றவுடன் நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் தண்ணீர் பெரிய குளத்தில் தேங்கி இருக்கும். அங்கு நீங்கள் குடும்பத்துடன் குளிக்கலாம். பாதுகாப்பு பிரச்சினைகள் இருக்காது. மெயின் அருவிக்கு இன்னும் கொஞ்சம் நடக்க வேண்டும். ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் குளிக்கும் போது சொர்க்கத்தில் இருப்பது போல உணர்வீர்கள்.

ஆரே நீர்வீழ்ச்சி

சென்னையில் இருந்து 89 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை வழியாக இந்த நீர்வீழ்ச்சியை சென்றடையலாம். காலை 8 மணியில் இருந்து இந்த அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இங்கு மொத்தம் ஐந்து நீர்வீழ்ச்சிகள் இருக்கின்றன. நீச்சல் தெரிந்தால் அருவி கொட்டும் இடத்தில் உள்ள குளத்தில் நன்கு நீச்சல் அடிக்கலாம். இங்கு பார்க்கிங் வசதியும் உண்டு.

சதாசிவ கோனா நீர்வீழ்ச்சி

சென்னையில் இருந்து 106 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு அம்மாவாரி, அய்யாவாரி என இரு நீர்வீழ்ச்சிகள் உள்ளன. சில கோயில்கள் இங்கு இருப்பதால் அருவிகள் சற்று தூய்மையாக இருக்கின்றன. கோடை சீசனில் தண்ணீர் வரத்து சற்று குறைவாக இருக்கும். ஞாயிறு விடுமுறையில் பொழுதுபோக்க சதாசிவ கோனா நீர்வீழ்ச்சி அற்புதமான இடமாகும். இந்த பயணம் சற்று சாகசமாக தோன்றலாம்.

கைலாசா கோனா நீர்வீழ்ச்சி

சென்னையில் இருந்து 92 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. திருவள்ளூர் - நாகலாபுரம் வழியாக இந்த இடத்தை செல்ல முடியும். இங்கு மொத்தம் மூன்று நீர்வீழ்ச்சிகள் உள்ளன. ஒரு நீர்வீழ்ச்சியில் 40 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டும். வருடம் முழுக்க இங்கு தண்ணீர் ஆர்ப்பரிக்கும். அருகிலேயே சிவன் கோயிலும் உள்ளது.

மூல கோண நீர்வீழ்ச்சி

சென்னையில் இருந்து 110 கிலோ மீட்டர் தூரம் திருவள்ளூர் - புத்தூர் வழியாக சென்றடைந்தால் இந்த நீர்வீழ்ச்சியை அடையலாம். இங்குள்ள கோயிலுக்கு படிகள் உள்ளன. மூலிகை குளியல் அழுத்தத்தில் இருந்து நீங்கள் விடுபடலாம்.

குறிப்பு

  • இந்த நீர்வீழ்ச்சிகளில் உடை மாற்றும் அறைகள் கிடையாது. எனவே பெண்கள் செல்வதாக இருந்தால் அதற்கான ஏற்பாடுகளை திட்டமிட்டு கொள்ளவும்.
  • மெயின் ரோட்டுக்கும் நீர்வீழ்ச்சிகள் இருக்கும் இடத்திற்கும் கடைகள் இருக்காது. உணவு பொருட்களை முன்கூட்டியே வாங்கி கொள்ளுங்கள்.
  • நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு சோப்பு மற்றும் இதர பொருட்களை எடுத்துச் சென்று அசுத்தம் செய்யாதீர்கள். தயவு செய்து குப்பை போடாதீர்கள். இந்த நீர்வீழ்ச்சிகள் அனைத்தும் உயிரினங்கள் வாழக் கூடியும்.

செல்லும் வழியில் குரங்குகளின் அட்டகாசம் இருக்கும். கவனமாக இருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP