கூந்தல் வளர்ச்சிக்கு எண்ணெய் மட்டும் போதாது; இந்த 5 பராமரிப்பு முறைகளும் அவசியம்

தலைமுடியை நன்றாக பராமரிக்க வேண்டும் என்றால் எண்ணெய் தேய்த்தால் மட்டும் போதும் என்று பலரும் கருதுகின்றனர். ஆனால், அதைக் கடந்து வேறு சில பராமரிப்பு முறைகளையும் அவசியம் பின்பற்ற வேண்டும்.
image
image

இளம் தலைமுறையினர் பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக தலைமுடி உதிர்வு காணப்படுகிறது. வயது மற்றும் பாலின பேதமின்றி பலரும் இதனால் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், தலைமுடியை பராமரிக்க எண்ணெய் தேய்க்க வேண்டும் என்ற ஒரு கூற்று நிலவுகிறது. அதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், ஆரோக்கியமான கூந்தல் பராமரிப்புக்கு எண்ணெய் மட்டுமே போதுமானதாக இருக்காது. இதற்காக குறிப்பிட்ட சில பராமரிப்பு முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அவற்றை இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்:

ஹேர் ஆயில், ஷாம்பூ, சீரம் என விலை உயர்ந்த பொருட்களை தலைமுடிக்காக பயன்படுத்தினாலும், ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றினால் மட்டும் நீண்ட நாட்களுக்கு நல்ல பலனை பெற முடியும். இதையே, அழகுக் கலை வல்லுநர்கள் முதல் மருத்துவர்கள் வரை எல்லோரும் அறிவுறுத்துகின்றனர். நமது தலைமுடி கெரட்டினால் ஆனது. இதனை வலுப்படுத்த புரதச் சத்துகள் நிறைந்த உணவுகளான முட்டை, பருப்பு, பன்னீர், மீன் மற்றும் விதைகள் ஆகியவற்றை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இது தவிர இரும்புச் சத்து, சின்க் போன்ற சத்துகளையும் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மூலம் தலைமுடி மட்டுமின்றி ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.

Foods for hair

உச்சந்தலையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்:

உங்கள் உச்சந்தலையில் எண்ணெய், தூசு, வியர்வை ஆகியவை சேர்ந்திருந்தால் அது முடியின் வேர்க்கால்களில் சிக்கிக் கொண்டு கூந்தலின் வளர்ச்சியை தடுக்கும். மேலும், இவை சில வகையான தொற்றுகள் மற்றும் பொடுகு பிரச்சனைக்கும் வழிவகுக்கும். எனவே, வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது சல்ஃபேட் இல்லாத ஷாம்பூ கொண்டு தலைக்கு குளிக்க வேண்டும். இது உங்கள் தலையின் இயற்கையான எண்ணெய் சுரப்பை பாதிக்காமல், தலையை சுத்தப்படுத்த உதவும்.

மேலும் படிக்க: முடி உதிர்வுக்கு முற்றுப்புள்ளி; இனி முருங்கை பொடியை இப்படி யூஸ் பண்ணுங்க மக்களே

தலைக்கு மசாஜ் செய்யலாம்:

உடலை உறுதியாக்க உடற்பயிற்சிகள் செய்வதை போன்று, தலைக்கு சிறிது மசாஜ் செய்யலாம். இதற்காக எண்ணெய் தேய்த்து நீண்ட நேரம் மசாஜ் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரணமாகவே, உங்கள் விரல்களை பயன்படுத்தி தினமும் சுமார் 5 நிமிடங்களுக்கு மிதமாக மசாஜ் செய்யலாம். இப்படி செய்யும் போது, தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து முடிக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகள் கிடைக்கும். இது உங்களுக்கு ரிலாக்ஸான உணர்வையும் கொடுக்கும்.

Head massage

கூந்தல் சேதமடைவதை தவிர்க்கவும்:

இவை அனைத்தையும் பின்பற்றியும் தலைமுடி உதிர்வு ஏற்படுகிறது என்றால், நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தும் பொருட்களில் ஏதேனும் பிரச்சனை இருக்கலாம். குறிப்பாக, தலைமுடிக்கு அதிகப்படியான இரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துவது கடுமையான பாதிப்புகள் மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும். இது தவிர தலைமுடியை சீவும் முறை போன்ற விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். தலைமுடியை சரியாக கையாளும் போது உதிர்வு போன்ற பிரச்சனைகள் இருக்காது.

மன அழுத்தத்தை குறைக்கவும்:

அதிகப்படியான ஸ்ட்ரெஸ், மன அழுத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால், தலைமுடி வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே, கூடுமானவரை மனதை ஒருநிலைப்படுத்தி அழுத்தம் தரக் கூடிய விஷயங்களை தவிர்க்கவும். நாள்தோறும் சுமார் 7 முதல் 8 மணி நேரம் உறங்குவதற்கு முயற்சி செய்யுங்கள். இது மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

எனவே, இவை அனைத்தையும் சரியாக பின்பற்றும் போது தலைமுடி உதிர்வு பிரச்சனை குறையும். உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த இவை உதவியாக இருக்கும்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP