திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மகள் ரிதன்யா (வயது 27). இரண்டு மாதங்களுக்கு முன்பு ரிதன்யாவுக்கு ஈஸ்வரமூர்த்தி, சித்ராதேவியின் மகனான கவின் குமார் (வயது 28) என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இரண்டு குடும்பமும் அரசியல் பின்புலம் கொண்டவர்கள். கோடிக்கணக்கில் செலவு செய்து வரதட்சணையாக பல சவரன் நகை, கார், சொத்து கொடுத்ததாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்த சில நாட்களில் தந்தையிடமும் தாயிடமும் ரிதன்யா புகுந்த வீட்டில் தனக்கு தொல்லை கொடுப்பதாக வருந்தியுள்ளார். நாட்கள் கடந்தால் எல்லாம் சரியாகிவிடும் என பெற்றோர் அவரை சமாதானம் செய்துள்ளனர். இந்த நிலையில் ரிதன்யா மொண்டிபாளையம் கோவிலுக்கு செல்லும் வழியில் காரை நிறுத்திவிட்டு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி, சித்ராதேவியை கைது செய்துள்ளனர்.
முன்னதாக தனது தந்தைக்கு ரிதன்யா வாட்ஸ் ஆப்-ல் குரல் பதிவு அனுப்பியுள்ளார். ரிதன்யாவின் இறுதி நிமிட பேச்சு நம் மனதை உலுக்குகிறது.
அப்பா என்னை மன்னிச்சிடுங்க, போதும் என்னால முடியல... என் மீது கோபப்படுவீங்க, வெறுத்திடுவீங்கனு தெரியும். காலம் முழுவதும் உங்க கூடயும், அம்மா கூடயும் இருந்திட்டு கஷ்டப்படுத்தி, வேதனைப்படுத்தி என்னாலயும் நிம்மதியாக இருக்க முடியாம ஊருக்காக இவனுடன் என்னால் வாழ முடியாது. என்னுடைய தலையெழுத்து என்று நினைத்து கொள்கிறேன். போதும் நான் என் வாழ்க்கையை முடிச்சுக்கிறேன். கோயிலுக்கு கூட்டிட்டி போறது, பஞ்சாயத்து செய்றது, பஞ்சாங்கம் பாக்குறதுனால பிரச்னை தீராதுனு புரிஞ்சிக்கிடேன். என்னை மன்னிச்சிடுங்க அப்பா... எனக்கு வாழ பிடிக்கவில்லை... எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை... நான் யாரையும் கஷ்டப்படுத்த வேண்டும் என நினைத்ததில்லை. எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என புரியவில்லை... நான் போறேன் அப்பா... இதுக்கு மேலயும் இருந்து எந்த விதத்திலும் உங்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. நான் உங்களுக்கு பிறந்ததே தவறு... என்னை மன்னித்துவிடுங்கள்...
என்னை திட்டமிட்டே கவின் திருமணம் செய்து இருக்கான். மன ரீதியாக அளிக்கப்படும் சித்ரவதையை தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடல் ரீதியாகவும் தினமும் தொல்லை கொடுக்கிறான். யாரிடம் சொல்லி புரிய வைப்பது என தெரியவில்லை. இதை பற்றி கேட்கும் எல்லாரும் சகிச்சுகோ வாழ்க்கை இப்படி தான் இருக்குமென சொல்றாங்க... இன்னும் பார்க்க வேண்டிய நிறைய இருக்கு.... நான் எந்தளவு பாதிக்கப்பட்டு இருக்கேனு புரிஞ்சிக்க மாட்டாறங்க. நீங்களும் நான் பொய் சொல்வதாக நினைக்கிறீங்க... நான் உங்களிடம் சத்தியமாக பொய் சொல்லவில்லை... நடந்ததை மட்டுமே சொன்னேன்... எல்லாரும் நாடகம் ஆடுறாங்க, உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை, என் மீது எந்த தவறும் இல்லை எனக்கு சத்தியமாக இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை. வாழ்க்கையை தொடர நினைக்கவில்லை என மிகுந்த மன வருத்தத்துடனும், அழுது கொண்டே குரல் பதிவை தந்தைக்கு அனுப்பியுள்ளார்.
ரிதன்யாவின் குரல் பதிவு இரண்டு விஷயங்களை உறுதிப்படுத்துகின்றன. திருமணம் முடிந்த பிறகு அவரை தொடர்ந்து கொடுமைப்படுத்தி, தொல்லை கொடுத்து வரதட்சணை பெற முயன்றுள்ளனர். இரண்டாவது தனக்கு நிகழும் கொடுமைகளை பெற்றோரிடம் சொல்லி நம்ப வைக்க முடியாமல் தன்னம்பிக்கை இழந்து வாழ்க்கை தொடர விரும்பாமல் தற்கொலை முடிவெடுத்துள்ளார்.
வரதட்சணை கொடுமையை தடுக்க இந்தியாவில் கடுமையான சட்டங்கள் உள்ளன. எனினும் பெற்றோர் அதை பொருட்படுத்தாமல் திருமண நிகழ்வுகளில் தொடர்ந்து லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் வரதட்சணை கொடுக்கின்றனர்.
மேலும் படிங்க சரியான துணை அமையும் வரை திருமணத்தை தள்ளிப்போடுவது சிறந்த முடிவா ?
27 வருடம் ஆசை ஆசையாக வளர்த்த மகளை வரதட்சணை கொடுமையால் இழந்த அந்த பெற்றோர் சட்ட ரீதியாக ரிதன்யாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க செய்து சமூகத்தில் சிறிய மாற்றத்திற்கான விதையாக அமைய வேண்டும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com