herzindagi
image

"ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மாறும் ஆண் மாறினால்" முற்போக்கான இந்தியாவை உருவாக்கிட ஆண்மையை மறுவரையறைத்தல் - பூனம் முத்ரேஜா

முற்போக்கான இந்தியாவை உருவாக்கிட ஆண்மையை மறுவரையறைத்தல் என்ற தலைப்பில் பாப்புலேஷன் ஃபவுண்டேஷன் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் பூனம் முத்ரேஜா எழுதிய கட்டுரை பிரத்யேகமாக தமிழில்...
Editorial
Updated:- 2024-11-14, 18:09 IST

சர்வதேச ஆண்கள் தினத்தன்று சமூகத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை உண்டாக்கிட எதிர்மறை மற்றும் தீங்கு விளைவிக்கும் ஆண்மை அல்லது ஆணாதிக்க மனநிலையில் மாற்றம் தேவை என்பதை முக்கியமான நினைவூட்டலாகக் கருத வேண்டும். இந்தியாவில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் பாலின வேறுபாடுகளை களைந்து உண்மையான முன்னேற்றத்தை அடைந்திட ஆண்மையை மறுவரையறைத்தல் அவசியமாகிறது. இதில் Har Zindagi Badlegi, Jab Mard Badlega அதாவது ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மாறும் ஆண் மாறினால் என்ற சொற்றொடர் ஆண்களின் பங்களிப்பை முக்கியத்துவப்படுகிறது. காலாவதியான மற்றும் தீங்கான ஆணாதிக்க மனநிலையில் இருந்து ஒரு ஆண் பரிணமித்து இரக்கம், மரியாதை, சமத்துவம் ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கும் போது சமூக மாற்றத்திற்கான ஊக்கிகளாக மாறுகின்றான். இது குடும்பத்தில் ஆரம்பித்து சமூகத்தில் எதிரொலித்து ஒட்டுமொத்த இந்தியாவிலும் பிரதிபலிக்கும்.

பல தலைமுறைகளாக ஆண்மை என்பது ஆதிக்கம், அலட்சியம், பாதிப்பை பொருட்படுத்தாத நிராகரிப்புடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. இது ஆண்களின் தனிப்பட்ட உணர்ச்சி வெளிப்பாட்டை கட்டுப்படுத்தியதோடு பாலின சமத்துவத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி சமூக முன்னேற்றத்தைக் குறைத்துள்ளது. வீடு, அலுவலகம், சமூகத்தில் ஆணாதிக்க மனநிலை பரவி உணர்ச்சி ரீதியான வெளிப்படைத்தன்மை தடைபட்டுள்ளது. மேலும் பரஸ்பர மரியாதை அளிப்பதும் பெரிதாக கவனிக்கப்படவில்லை. யாருடைய உதவியையும் நாடக் கூடாது என உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாத நிலைக்கு ஆண்கள் தள்ளப்படுகின்றனர். இந்த உணர்ச்சி அடக்குமுறை ஆண்களின் மன ஆரோக்கியத்தை பாதித்து அதிக தற்கொலைகளுக்கு வழிவகுக்கிறது. இது ஒரு தீர்க்கப்படாத உணர்ச்சி தொடர்புடைய பிரச்னையாகும். தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தகவலின்படி 2022ஆம் ஆண்டில் இந்தியாவின் தற்கொலை எண்ணிக்கையில் 72 விழுக்காட்டினர் ஆண்களே ஆவர்.

மிகப்பெரிய சவால் என்னவென்றால் ஆணாதிக்க மனநிலை சமூகத்தில் எந்தளவிற்கு ஏற்றழ்தாழ்வுகளை நிலைநிறுத்தியுள்ளது என அறிய வேண்டும். உதாரணத்திற்கு இந்தியாவின் the Masculinity and Health study by the International Men and Gender Equality Survey (IMAGES) ஆதிக்க மனநிலையில் உள்ள ஆண்கள் பாலின சமுத்துவம், வீட்டு பொறுப்புகளை பகிர்ந்துகொள்ள விரும்புவதில்லை என தெரிவிக்கிறது. இது அனைவரின் சுதந்திரத்தையும் கெடுக்கும் பாலின விதிமுறைகளை நிலைநிறுத்துகிறது. வீட்டில் ஒரு ஆண் குடும்ப பொறுப்புகளை நிர்வகிக்க தவறும் போது ஒட்டுமொத்த பொறுப்பும் குடும்பத்தின் மீது விழுகிறது. இன்னுமும் கூட மூன்றில் ஒரு பங்கு ஆண்கள் குடும்ப கட்டுப்பாடு, கருத்தடை ஆகியவற்றை பெண்களின் பிரச்னையாக பார்க்கின்றனர் என NFHS-5 தரவு குறிப்பிட்டு காட்டுகிறது.

View this post on Instagram

A post shared by Population Foundation of India (@populationfoundationindia)

வீட்டு பொறுப்புகளை ஆண்கள் பகிர்ந்துகொள்ளாவிட்டாலும் முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரத்தை தங்கள் வசம் வைத்துள்ளனர். இந்த ஏற்றத்தாழ்வானது கருத்தரித்தலில் பெண்களின் விருப்பத்தைத் தடுக்கிறது. மேலும் பெண்களின் பொருளாதார மற்றும் சமூக சார்புநிலை ஆண்களிடம் சென்றுவிடுகிறது. கலாச்சார நடைமுறை உருவாக்கிய அமைப்பில் ஆண்கள் முடிவெடுக்கும் சக்திகளாகவும் பெண்கள் அவற்றுக்கு வெறுமனே இயங்கும் நபர்களாகவும் உள்ளனர். இதனால் குடும்ப மற்றும் சமூக அளவில் சமுத்துவமின்மை தொடர்கிறது.

பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரும்பாலும் தடையாக இருப்பவை உடல் அல்ல சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள விதிமுறைகளும் எதிர்பார்ப்புகளுமே. பெண்கள் தலைமை பொறுப்பில் இருக்க கூடாது அல்லது அவர்களுடைய முதன்மை பொறுப்பு வீடு மட்டுமே என்ற நிலை நீடிக்கிறது. இந்த மனநிலை பல தலைமுறைகளாக கடத்தப்பட்டுள்ளது. உலகின் பெரும்பாலான பகுதிகளிலும் இதே நிலை தான். பெண்கள் மற்றும் சிறுமிகள் சமத்துவமற்ற, பாகுபாடு கொண்ட சமூக அமைப்பில் பிறக்கின்றனர். பெண்கள் அனுபவிக்கும் தொடர் வன்முறைகளானது சமூகத்தில் எந்த அளவிற்கு ஆணாதிக்க மனநிலை வேரூன்றியுள்ளது என்பதை பிரதிபலிக்கிறது.

எனவே தான் பாலின சமத்துவத்தில் ஆண்களின் பங்களிப்பு முக்கியமாகிறது. இந்த விஷயத்தில் ஆண்கள் இனி பார்வையாளர்களாக இருக்க முடியாது; சமுக மாற்றத்திற்கான செயல்களில் பங்கு வகிக்க வேண்டும். இது ஈடுபாட்டையும் கடந்தது.

சிறுவயதில் இருந்தே இந்த சமூக நெறிமுறைகளோடு ஆண்கள் வேரூன்றியிருப்பதால் அவற்றை அகற்றும் பணியும் ஆரம்பத்திலேயே தொடங்க வேண்டும். இதற்கென சில முதலீடுகளை செய்தாக வேண்டும். இளம் பருவத்திலேயே தலைமுறைகளாக வேரூன்றி கிடக்கும் நம்பிக்கைகள் பற்றி வெளிப்படையாகப் பேசி ஆராய வேண்டும்.

பாப்புலேஷன் ஃபவுண்டேஷன் ஆப் இந்தியா உருவாக்கிய SnehAI செயற்கை நுண்ணறிவு செயலி பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம், உறவு மற்றும் மனநலன் போன்ற உணர்ச்சி வயப்படுகிற விஷயங்கள் குறித்து ஆராய உதவுகிறது. இது போன்ற தரவுகள் கொண்ட தளங்களை இளைஞர்களுக்கு கொடுக்கும் போது அவர்களிடம் ஆணாதிக்க மனநிலையை எதிர்த்துச் செயல்படும் வாய்ப்பை உருவாக்க முடியும். இதனால் பாலின சமத்துவத்தை கடைபிடிப்பதில் இளைஞர்களின் பங்களிப்பை மட்டுமல்ல அவர்களுக்கு தங்களை பாதுகாக்கும் அறிவையும் கொடுக்கலாம்.

இந்த மாற்றமானது வயதுக்கு உட்பட்டது அல்ல; இது அனைவருக்குமான தொடர் பயணமாகும். நச்சான ஆணாதிக்க மனநிலையில் இருந்து விடுபடுவதற்கு ஒருவர் மீது ஏற்படும் தாக்கத்தை மட்டும் அறிந்து கொண்டால் போதாது. பாப்புலேஷன் ஃபவுண்டேஷன் ஆப் இந்தியாவின் Main Kuch Bhi Kar Sakti Hoon (MKBKSH) முயற்சி சமூக நெறிகள் மற்றும் சுய நம்பிக்கை குறித்து ஆண்கள் கேள்வி எழுப்பி மாற்றத்தை உண்டாக்கிட ஊடகங்கள் எந்த வகையில் ஊக்கமளிக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இதைக் கண்ட பிறகு மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூரில் உள்ள ஆண்கள் சிலர் பாலின சமுத்துவத்திற்காக வாதாடினர். மேலும் பாடல்கள் பாடி சக ஆண்களிடம் இரண்டாவது குழந்தை பெற்றெடுப்பதை தள்ளிப்போடவும், கருத்தடை செய்யவும் ஊக்கப்படுத்தினர். முக்கியமாக தனிப்பட்ட உறவுகளில் சமத்துவம் பின்பற்றி மரியாதை அளிக்கவும் உறுதி பூண்டனர்.

பாலின சமத்துவத்தில் ஆண்களின் பங்களிப்பை வைத்தே நிலையான முன்னேற்றத்தை அடைய முடியும். பெண்களின் வாழ்க்கை மீது முடிவெடுக்கும் நபர்களாக இருக்க கூடாது. ஆனால் சமூகத்தை உருவாக்க அவர்களின் துணையாகவும் கூட்டாளியாகவும் இருக்க வேண்டும். குழந்தை வளர்ப்பு, குடும்ப கட்டுப்பாடு, வீட்டு வேலை ஆகியவற்றில் ஆண்களும் பாதி பொறுப்பேற்று பெண்களின் சுமையில் பங்கெடுக்க வேண்டும்.

Har Zindagi Badlegi, Jab Mard Badlega அதாவது ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மாறும் ஆண் மாறினால் என்ற சொற்றொடர் மிகத் தெளிவான செய்தியை கூறுகிறது. இந்த மாற்றம் குடும்பத்தில் தொடங்கி சமூகங்களில் நீடித்து தேசிய அளவில் வடிவம் பெற வேண்டும். இதில் ஆண் மற்றும் பெண்ணின் பங்களிப்பு சமமானது. இதில் முதல் படி என்னவென்றால் பெண்களின் பிரச்னைகளை அவர்களுடையதாக மட்டும் புரிந்துவிடக் கூடாது. இதில் ஆண்கள் மற்றும் சமூகத்தின் பங்கு நீடிக்கிறது.
ஆணாதிக்கம் ஜனநாயகத்திற்கு எதிரானது என பெண்ணிய உளவியலாளர் கரோல் கில்லிகன் குறிப்பிடுகிறார். வீடு அல்லது சமூகம் எதுவாக இருந்தாலும் பொறுப்பு என்பது இருபாலினருக்கும் சமமானதாகும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com