100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகும் மதுரை மாவட்டத்தில் உற்சாக குளியல் போட்டு மகிழ சுற்றுலாத் தளம் உள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா ? ஆம் மதுரையில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் சிறுமலை தொடரில் நீர்வீழ்ச்சி ஒன்று அமைந்துள்ளது. பெரும்பாலான மதுரைவாசிகளுக்கு இந்த இடம் நன்கு தெரியும். இதற்கு குட்லாடம்பட்டி அருவி, தாடகை நாச்சியம்மன் நீர்வீழ்ச்சி என பெயர்கள் உண்டு. உங்களிடம் 100 ரூபாய் இருந்தால் போதும் வார விடுமுறையில் இந்த அருவிக்கு சென்று உற்சாக குளியல் போட்டு மகிழலாம். இது மதுரையின் குற்றாலம் எனவும் பெயர் பெற்றது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே டி.மேட்டுப்பட்டி ஊராட்சி பகுதியில் குட்லாடம்பட்டி அருவி அமைந்துள்ளது. இந்த அருவி வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை சீசன் காலம் ஆகும். சுமார் 27 மீட்டர் உயரத்தில் இருந்து நீர் அர்ப்பரித்து கொட்டும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான கட்டணம் 10 ரூபாய் மட்டுமே. நுழைவு வாயிலில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து அருவியை சென்றடைய வேண்டும். உள்ளே செல்வதற்கு படிக்கட்டுகள் உள்ளன.
மதுரையில் இருந்து பெரியகுளம் செல்லும் பேருந்தில் ஏறுங்கள். ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து புறப்படும். 20 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து வாடிப்பட்டியில் இறங்கவும். வாடிப்பட்டியில் இருந்து குட்லாடம்பட்டிக்கு செல்ல பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. வாடிப்பட்டியில் இருந்து குட்லாடம்பட்டியின் தூரம் 5 கிலோ மீட்டர் மட்டுமே. மதுரை - வாடிப்பட்டிக்கு அதிகபட்சமாக 30-35 நிமிடங்கள் எடுக்கும்.
தென் மாவட்டங்களை கஜா புயல் தாக்கிய போது குட்லாடம்பட்டி அருவி பகுதியிலும் பாதிப்பு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு கம்பங்களும், தடுப்புகளும் சேதமடைந்தன. குளிக்கும் இடமும் பாதுகாப்பாக இல்லை. இதன் காரணமாக வனத்துறை கடந்த 6 வருடங்களாக யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. ஒரு சில இளைஞர்கள் ஆர்வமிகுதியில் அருவியில் சென்று குளிக்கின்றனர்.
இந்த நிலையில் மதுரை மாவட்ட வனத்துறையும், சுற்றுலாத்துறையும் அருவி பகுதியை சீரமைக்க நிதி கோரியது. தமிழக அரசும் 3 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த பணத்தில் தடுப்புகள், கம்பங்கள், உடை மாற்றும் அறை, கழிவறை, வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2024 இறுதிக்குள் பணிகள் நிறைவுபெற்று ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com