கத்தோலிக்க தேவாலயங்கள், ரோமன் கத்தோலிக்க திருச்சபை என்றும் அழைக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய கிறிஸ்தவ பிரிவான இவற்றின் தலைமை தேவாலயம் வாடிகன் நகரில் உள்ளது. நாம் இந்த பதிவில் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயங்கள் எங்கு உள்ளது என்று பார்ப்போம்.
அலங்கார உபகார அன்னை திருத்தலம்
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க ஆலயங்களில் ஒன்று தூய அலங்கார உபகார அன்னை திருத்தலம். குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த திருத்தலத்தில் உள்ள மரியன்னை சுரூபம் 16ஆம் நூற்றாண்டில் ரோமில் இருந்து கொண்டுவரப்பட்டது.
பனிமய மாதா பேராலயம்
தூத்துக்குடியில் அமைந்துள்ள பனிமய மாதா பேராலயம் 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய பாணியில் கட்டப்பட்டதாகும். இப்பேரலாயத்தில் உள்ள மாதா சொரூபம், கடந்த 469 ஆண்டுகளுக்கு முன்பு புனிதர் பிரான்சிஸ் சவேரியாரால் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டது.
பூண்டி மாதா பேராலயம்
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ளது பூண்டி மாதா பேராலயம். 18ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவரின் முயற்சியால் கட்டப்பட்ட இந்த பேராலயம் இந்தியாவில் உள்ள பசிலிக்கா என்று அழைக்கப்படும் கத்தோலிக்க கிறிஸ்தவ பேராலயங்களில் ஒன்று.
லூர்து அன்னை தேவாலயம்
திருச்சியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க லூர்து அன்னை தேவாலயம் 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பெர்னதெத் என்ற சிறுமிக்கு அன்னை மேரி காட்சியளித்த அற்புதம் உண்மை என்று அறியப்பட்ட இடத்தில் இந்த தேவாலயம் கட்டப்பட்டுள்ளது.
அதிசய மணல் மாதா ஆலயம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அமைந்துள்ளது அதிசய மணல் மாதா ஆலயம். 17ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் ஏற்பட்ட மணல் புயலுக்கு பிறகு ஆடு மேய்க்கும் சிறுவனால் மணலில் புதைந்திருந்த இந்த தேவாலயம் கண்டுபிடிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
புனித சவேரியார் பேராலயம்
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு பகுதியில் அமைந்துள்ள புனித சவேரியார் பேராலயம் 15ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. ஸ்பெயின் நாட்டில் பிறந்த புனித சவேரியாருக்கு முதன் முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் என்ற பெருமை இந்த பேராலயத்திற்கு உள்ளது.
ஆரோக்கிய அன்னை தேவாலயம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள ஆரோக்கிய அன்னை தேவாலயம் உலக புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயங்களில் ஒன்றாக இருக்கிறது. 15ஆம் நூற்றாண்டில் மரியன்னை குழந்தை இயேசுவுடன் காட்சியளித்த இடத்தில் இந்த தேவாலயம் கட்டப்பட்டுள்ளது.
சாந்தோம் தேவாலயம்
சென்னையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் சாந்தோம் தேவாலயம், 16 ஆம் நூற்றாண்டில், போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது. இந்த தேவாலயம் செயின்ட் தாமஸுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வழிபாட்டுத் தலமாகும்.