ஆண் பெண் சம உரிமை பற்றி பேசுபவர்கள் ஆயிரம், ஆனால் அவை வீடுகளில் கூட கடைபிடிக்கப்படுவதில்லை என்பதே மறுக்கமுடியாத உண்மையாகும். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ஆண்களுக்கு சலைத்தவர்கள் அல்ல என்று எல்லா துறையிலும் நிரூபித்து வருகின்றனர், அதே சமயம் ஆண் ஆதிக்க மனநிலையும் பல ஆண்களிடையே மாறி உள்ளது. மாதவிடாய் நாட்களில் பெண்களை புரிந்து கொள்வது முதல் அவர்கள் எதிர்கால கனவை நினைவாக்குவது வரை ஆண்களும் அப்பாவாக, அண்ணனாக, கணவனாக தங்களால் முடிந்து அளவு ஆதரவை கொடுக்கின்றனர் அல்லது கொடுக்க முயற்சி செய்கின்றனர்.
முன்பெல்லாம் விளையாட்டுகள் குறிப்பாக மைதானத்தில் விளையாட கூடிய கிரிக்கெட், கால் பந்து போன்ற விளையாட்டுகள் ஆண்களுக்கான விளையாட்டாகவே பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெண்களும் ஆண்களுக்கு நிகராக விளையாடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இந்த பதிவும் உதவலாம்: பெண் என்பதால் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நிராகரிக்கப்பட்டாரா?
ஒரு சில குடும்பங்கள் பெண் பிள்ளைகளை கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட அனுமதித்தாலும், பல பெற்றோர்களும் இதை விரும்புவதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். பாதுகாப்பான தங்கும் இடம் முதல் ஊதியம் வரை, எதிலும் ஆண்களுக்கு நிகரான சலுகைகள் பெண்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மிகவும் குறைவு. குறைவான ஊதியம் காரணமாக விளையாட்டை ஒரு தொழிலாக யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவிப்பு பெற்றோர்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவிப்பு என்ன?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) பெண்கள் கிரிக்கெட்டை தங்கள் பிரிவின் கீழ் கொண்டு வந்துள்ளன. பெண் கிரிக்கெட் வீரங்களுக்கு வழங்கும் ஊதியத்தை பற்றி இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தபோது, உலகம் அதை மாற்றத்தின் முன்னோடியாகப் பாராட்டியது. இந்த முடிவு இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் எவ்வளவு தூரம் முன்னேறி உள்ளது என்பதை பிரதிபலிக்கிறது. மாற்றத்திற்கான இந்த முதல் படி நிச்சயம் வரவேற்கத்தக்கது.
இந்திய கிரிக்கெட்களின் ஊதியம் எவ்வளவு?
இந்திய பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆண் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் அதே போட்டி கட்டணமாக ஒரு டெஸ்ட் போட்டிக்கு ருபாய் 15 லட்சமும், ஒரு ஒருநாள் போட்டிக்கு ருபாய் 6 லட்சமும், ஒரு சர்வதேச T20 க்கு 3 லட்சமும் ஊதியமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ஒரு டெஸ்ட் போட்டிக்கு ருபாய் 4 லட்சமும், சர்வதேச T20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு ருபாய் 1 லட்சமும் ஊதியமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பெண் கிரிக்கெட் வீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
- வரலாற்று ஏற்றத்தாழ்வு
- வளங்கள் மற்றும் பார்வையாளர்கள் பற்றாக்குறை
- போதுமான பயிற்சி மற்றும் சலுகையின்மை
- மனநிலையில் மாற்றம் தேவை. பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளிலும் பார்வையாளர்கள் கூட்டம் நிரம்ப வேண்டும்
இந்திய பெண் கிரிக்கெட்டின் முன்னேற்றம்
சமீபகாலமாக பெண்கள் கிரிக்கெட்டின் தரம் மற்றும் பார்வையாளர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் 2020 பெண்களுக்கான T20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி, 2022 இல் ஆசியக் கோப்பையை வென்றது மற்றும் தொடக்க காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது போன்ற நிகழ்வுகள் பெண் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு தனி அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பெண்கள் யார் என்று தெரியுமா
தற்போது இந்தய மகளிர் கிரிக்கெட் அணி ICC மகளிர் தரவரிசையிலும் முன்னேறி உள்ளது. இன்று இந்திய அணி ஆசியா மற்றும் உலக அளவிலான முன்னணி அணிகளில் ஒன்றாகும். இந்நிலையில் அடுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் எதிர்கால சுற்றுப்பயண நிகழ்ச்சியில் (2023–25) இந்திய பெண் கிரிக்கெட் வீரர்கள்களும் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மகளிர் கிரிக்கெட் வீரர்கள் அதிக உயரங்களை எட்டுவதும், ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையான புகழ், மரியாதை, நட்சத்திர அந்தஸ்தை அடைவதும் நிச்சயம் எல்லா இந்தியர்களுக்கும் பெருமைக்குரிய விஷயமாக இருக்கும். இது ஆரம்பமே! எதிர்கால இந்திய கிரிக்கெட் வரலாற்று பக்கத்தில் பெண்களின் பெயரும் இடம்பெறட்டும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik