ஆயிரம் தான் இந்திய பெண்கள் பல துறைகளில் முன்னேறினாலும், ஆணுக்கு இணையாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வந்தாலும், பெண்களுக்கு வரதட்சனை கொடுமை இன்னும் ஒரு சில இடங்களில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. பண்டைய காலத்தில் தன் பெண்ணுக்கு திருமணம் செய்து கொடுக்கும் பெற்றோர், தன் கணவர் வீட்டில் மகள் பொருளாதார சிக்கல் இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காக பரிசாக பல விலையுயர்ந்த நகைகள், பொருட்கள், பணம் என்று கொடுத்து கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக சொல்லப்பட்டது. அதே சமயம், ஆணாதிக்க சமூகத்தில் பெண் ஒரு விலை கொடுத்து விற்க வேண்டிய பொருளாக இருந்தாள் என்பதன் குறியீடாகவே வரதட்சணை வழங்கினர் என்றும் பெண்ணியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதுவே தற்போது கட்டாய வரதட்சணையாக மாறி விட்டது. பின்நாட்களில் பெண் வீட்டார் தங்கள் மகளின் மகிழ்ச்சிக்காக கடனை வாங்கி மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் பொருட்களை எல்லாம் கொடுக்க தொடங்கினார்கள். அல்லாதபட்சத்தில் பெண்கள் வரதட்சனைக்காக கொடுமைப்படுத்தப்பட்டனர்.
இது போன்ற கொடுமைகளைத் தடுக்கத்தான் இந்திய அரசு வரதட்சணை தடுப்பு சட்டம் எனும் ஒரு சட்டத்தை 1961 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. வரதட்சணை கொடுமையால் மாப்பிள்ளை வீட்டாரிடம் சிக்கித்தவிக்கும் பெண் வீட்டாருக்காக இயற்றப்பட்ட சட்டம் தான் இந்த சட்டம். இந்த சட்டம் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இயற்றப்பட்ட சட்டம் என்று சொல்லப்பட்டாலும் ஆண்களுக்கெதிராக பெண்கள் பயன்படுத்தும் ஆயுதமாக இந்த சட்டம் விளங்குகிறது என்ற விமர்சனமும் உண்டு.
இதுவும் உதவலாம் : இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பெண்கள் யார் என்று தெரியுமா?
யாரெல்லாம் குற்றவாளிகள்?
இந்த சட்டத்தை பொறுத்தவரை வரதட்சணை வாங்குபவர் மட்டும் அல்ல, வரதட்சணை கொடுப்பவரும் குற்றவாளி தான். அதே போல வரதட்சணை வாங்க தூண்டுபவர் மற்றும் கொடுக்க தூண்டுபவரும் குற்றவாளியே. நேரடியாகவோ, மறைமுகமாகவோ வரதட்சணை வாங்கினாலும், கொடுத்தாலும் அவர்களுக்கு 15000 ரூபாய் அல்லது அந்த வரதட்சணை மதிப்பின் தொகை, இதில் எது அதிகமோ அந்த அளவு அபராதத்துடன் சேர்த்து, 5 ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத் தண்டனையும் கிடைக்கும்.
ஆதாரம்: வரதட்சணை தடுப்பு (மணமகன் மற்றும் மணமகளின் பரிசுப் பொருட்களின் பட்டியலைப் பராமரித்தல்) விதிகள் 1986
https://tn181whl.org/tamil/wp-content/uploads/2021/02/Dowry-Prohibition-Act.pdf
மணப்பெண் அல்லது மணமகனின் பெற்றோர், அல்லது பிற உறவினர்கள் அல்லது காப்பாளரிடம், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரதட்சணை கேட்பது, 10000 ரூபாய் வரையிலான அபராதத்துடன், 2 வருடங்கள் வரை நீட்டிக்கக் கூடிய 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றமாகும்.
மகன் அல்லது மகள் அல்லது எந்த ஒரு உறவினரின் திருமணத்துக்காக, சொத்து அல்லது பணம் அல்லது இரண்டிலும் பங்கு தருவதாக அல்லது வியாபாரத்தில் பங்கு தருவதாக, அல்லது வேறு வகையில் தருவதாக விளம்பரத்தின் மூலமாக அளிக்கப்படும் சலுகைகள், 15000 ரூபாய் வரையிலான அபாராதத்துடன், 5 வருடங்கள் வரை நீட்டிக்கக் கூடிய 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய தண்டனைக்குரிய குற்றமாகும்.
வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ்,
1. பிடியாணை (வாரண்ட்) இல்லாமல் சம்பந்தப்பட்டவரை கைது செய்ய முடியும்
2. இவர்களுக்கு பெயில் கிடைக்காது
3. இவர்கள் மீது குற்றம் சுமத்தியவர் நினைத்தால் கூட மறுபடியும் வழக்கை வாபஸ் வாங்க முடியாது.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நீதிபதி முன் ஆஜர் படுத்தி அவர்கள் மீது எந்த குற்றமும் இல்லை என்று ஆதாரத்துடன் நிரூபித்தால் மட்டுமே இவர்கள் வெளியே வர முடியும்.
வரதட்சணை இறப்பு சட்டம்
ஒரு பெண் திருமணமாகி 7 வருடங்களுக்குள் உடல் காயத்துடன் அல்லது தீக்காயங்களுடன் அல்லது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இறந்து இருந்தால், அது வரதட்சணை இறப்பாக கருதப்படும். இதில் சம்பந்தப்பட்ட மாப்பிள்ளை வீட்டார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் பெண்ணுக்கு வரதட்சணையாக கொடுத்த அனைத்தையும் பெண் வீட்டாரிடம் ஒப்படைக்க வேண்டும். இதில் தொடர்புடையவர்களுக்கு 7 ஆண்டு முதல் ஆயுள் காலம் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.
இதுவும் உதவலாம் : கற்பழிப்பு என்று எழுதும் முட்டாள்தனம் எப்போது தீரும்? முறையாக எழுதுவது எப்படி?
இந்த சட்டம் பலம் பெற்றது எப்போது?
1983 ஆம் ஆண்டு இதில் சில திருத்தங்கள் செய்து மேலும் வலுவூட்டப்பட்ட பிறகு, வரதட்சணை கொடுமை கொஞ்சம் குறையத் தொடங்கியது என்கிறார் சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ரேவதி. குறிப்பாக தமிழகத்தில் சிலிண்டர் வெடிப்பு மூலமாக மருமகள் இறப்பது தொடர்கதையாக இருந்த காலமெல்லாம் இந்த சட்டத்தின் கடுமையான பிடியால் குறைந்தது என்றும் சொல்லலாம். அதேசமயம், வரதட்சணை வாங்கும்/கொடுக்கும் பழக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. கல்வியறிவு வந்துவிட்டதாக சொல்லிக்கொள்வோரும் கூட இதன் அவலத்தை உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை என்றும் ஹெர்சிந்தகி தமிழுடன் பேசியபோது தெரிவித்தார் ரேவதி.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik