கர்ப்ப காலத்தில் வளரும் வயிறை நினைத்து பெருமிதம் கொள்ளும் பெண்கள் பிரசவத்திற்கு பிறகு அது தொடர்வதை விரும்புவதில்லை. பிரசவத்திற்கு பிறகும் வயிறு குறையாமல் இருப்பது அவர்களுக்கு வருத்தத்தை தருகிறது. வயிறு குறையாமல் அப்படியே இருந்து விடுமோ என்று பயமும் நிறைய பெண்களுக்கு இருக்கும். இது குறைய 12 வாரங்கள் முதல் 12 மாதங்கள் வரை ஆகலாம். ஒவ்வொரு பெண்ணின் உடல் வாகு மற்றும் பராமரிப்பு முறை பொறுத்து இது வேறுபாடலாம்.
பிரசவத்திற்குப் பின் வயிறு குறையாமல் இருப்பதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகளையும், கிளவுட் நைன் குரூப் மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவத இயக்குநர் மற்றும் மூத்த ஆலோசகரான டாக்டர் பிரதிபா சிங்கல் அவர்களிடம் இருந்து தெரிந்துகொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் காலையில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
பிரசவத்திற்கு பின் தொப்பை வருவதற்கு காரணம் என்ன?
ஒரு பெண்ணின் கர்ப்ப காலத்தில் உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. வளரும் கருப்பை மற்றும் நஞ்சுக்கொடியுடன், கருவின் உள்ளே சிசுவும் வளர்ச்சி அடைகிறது. இதனுடன் குழந்தை உள்ளே மிதப்பதற்கு தேவையான அளவு அம்னோடிக் திரமமும் அதிகரிக்கின்றன என நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.
வளரும் குழந்தையின் தேவையை பூர்த்தி செய்ய, கர்ப்ப காலம் முழுவதும் பெண்கள் இயல்பை விட அதிகமாக சாப்பிடுகிறார்கள். இதனால் உடல் எடை அதிகரிப்பதுடன் வயிற்றுப் பகுதியில் கொழுப்பும் படிய தொடங்குகிறது. கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் சராசரி எடை அதிகரிப்பு 10-12 கிலோ வரை இருக்க வேண்டும். குழந்தை பிறந்த பிறகு ஏழு கிலோ வரை எடை குறையலாம். கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட அனைத்து மாற்றங்களும் இயல்புக்கு வர தொடங்கும் அடுத்த மூன்று வாரங்களில் இன்னும் சில கிலோ எடை குறையலாம். பல காரணங்களினால் இது எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
ஒரு சில பெண்கள் பிரசவத்திற்கு பிறகும் அதிகமாக உணவு உட்கொள்வதை தொடருவதால் உடல் எடை மேலும் அதிகரிக்கலாம். ஒரு சிலர் கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்கின்றனர். இது போன்ற அதிக கலோரி உள்ள உணவுகளால் உடல் எடை மேலும் அதிகரிக்கலாம். புரத உணவுகளில் கவனம் செலுத்தாத தாய்மார்களுக்கு ஆரம்பத்தில் உடல் எடை குறைந்தாலும், பிரசவத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிக்கும். இது கர்ப்பத்திற்கு முந்தைய நாட்களில் இருந்த உடல் எடைக்கு திரும்புவதற்கு தடையாக இருக்கும். இதுபோன்ற எடை அதிகரிப்பினால் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்ந்து தொப்பையாக மாறிவிடும் என நிபுணர் விளக்கம் அளித்துள்ளார்.
பிரசவத்திற்கு பின் வயிறை குறைப்பது எப்படி?
பிரசவத்திற்கு பிறகு வயிறு குறையாமல் இருப்பதை பார்த்து பயப்பட வேண்டாம். இதை குறைப்பதற்கு பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம் என நிபுணர் கூறுகிறார். மேலும் குறைந்த கார்போஹைட்ரேட் உள்ள ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சிகள் செய்வது மற்றும் வயிற்றுக்கு பெல்ட் பயன்படுத்துவது போன்ற ஒரு சில எளிமையான விஷயங்களை கடைப்பிடிப்பதன் மூலம் பிரசவத்திற்கு பின் உள்ள வயிறை சுலபமாக குறைத்து விடலாம். இதற்கான சில தீர்வுகள் பின்வருமாறு
விறுவிறுப்பான நடை/ லேசான பயிற்சிகள்
புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் பிரசவத்திற்கு பின், 15 நாட்கள் கழித்து விறுவிறுப்பான நடை பயிற்சி மேற்கொள்ளலாம். இது எடை இழப்புக்கு உதவும். பிரசவம் முடிந்த ஆறு வாரங்கள் கழித்து லேசான பயிற்சியை மருத்துவரை ஆலோசனையுடன் செய்யலாம். குறிப்பாக சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு காயங்கள் ஆறுவதற்கான நேரம் கொடுக்க வேண்டும். ஆகையால் ஆறு வாரங்கள் முடிந்த பிறகு மருத்துவரை ஆலோசித்த பின் அவர்களும் லேசான உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: பூசணி விதைகள் பெண்களுக்கு ஏன் நல்லது தெரியுமா?
வயிற்றுக்கு பெல்ட்
பிரசவத்திற்குப் பிறகு வேலைகளை செய்ய தொடங்கும் காலகட்டத்தில் பெண்கள் வயிற்றை காட்டன் துணியை வைத்து கட்டிக்கொள்ளலாம் அல்லது பெல்ட் பயன்படுத்தலாம். இந்த பரந்த எலாஸ்டிக் பெல்ட் உங்கள் விலா எலும்புகளிலிருந்து இடுப்புக்கு கீழ் வரை நீளும். இது பிரசவத்தின் போது கருப்பையின் இயக்கத்தால் ஏற்படும் வலியைத் தடுக்க உதவுகின்றன. நீங்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொழுது பெல்ட் அணியலாம். இது உங்களை சௌகரியமாக வைத்துக்கொள்ளும். இந்த பெல்ட்டுகளை ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு 10-12 மணி நேரம் வரை, அவற்றின் வசதியைப் பொறுத்து பயன்படுத்தலாம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik