H3N2 வைரஸ் பற்றிய முக்கியமான கேள்விகளுக்கு விடை தருகிறார் மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா

கொரோனா ஏற்படுத்திய உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார பாதிப்பிலிருந்து உடலாலும், மனதாலும் மீளாத நிலையில் அடுத்த பாதிப்பா? H3N2 வைரஸால் பரவக்கூடிய ஃபுளு காய்ச்சல் உண்மையில் ஆபத்தானதா?...

Shobana Vigneshwar
doctors advice to stay away from influenza

அதிகரித்து வரும் ஃபுளு காய்ச்சல் கொரோனாவை போல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற அச்சம் எல்லோரிடத்திலும் நிலவி வருகிறது. இதை தெளிவுபடுத்தி நம் மனதில் எழும் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து, தன் நம்பிக்கையான வார்த்தைகளால் ஃபுளு காய்ச்சல் பற்றிய அச்சத்தை தகர்த்தியுள்ளார் மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா அவர்கள். ஃபுளு காய்ச்சல் பற்றி அதிகம் விவாதிக்கப்படும் கேள்விகளுக்கு மருத்துவர் அளித்த பதில்களின் தொகுப்பை இப்பதிவில் பார்க்கலாம்.

H3N2 கொரோனவை போல கடுமையாகப் பரவக்கூடியதா?

கொரோனா புதிதாக உருவெடுத்த வைரஸ் தொற்றினால் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தடுப்பூசிகளை தயாரிப்பதற்கும், நோயிலிருந்து மீண்டு வருவதற்கும் கூடுதல் காலம் தேவைப்பட்டது. ஆனால் இந்த H3N2 எனும் ஃபுளு காய்ச்சல் வருடந்தோறும் வரக்கூடியாது, ஆகையால் இதை கொரோனாவுடன் ஒப்பிட்டு யாரும் பயப்பட வேண்டாம் என மருத்துவர் கூறியுள்ளார். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் கவனமாக இருந்தால் நோய் பரவலை தடுக்கலாம்.

கொரோனா Vs H3N2

influenza symptoms

இவை இரண்டும் நுரையீரல் மற்றும் சுவாசப் பாதை தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. மேலும் சளி, காய்ச்சல், இருமல், தலை வலி, உடல் வலி போன்ற பொதுவான சில அறிகுறிகளையும் கொண்டுள்ளன. இருப்பினும் கொரோனா உடன் ஒப்பிடுகையில் H3N2 தீவிரமானது அல்ல என மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா இருப்பதை உறுதி செய்ய சுய பரிசோதனை கிட் உள்ளது, ஆனால் ஃபுளு காய்ச்சலை மருத்துவ பரிசோதனைகள் மூலமாக மட்டுமே உறுதிப்படுத்த முடியும். மேலும் இது போன்ற பரிசோதனைகள் தேவைப்பட்டால் மட்டுமே பரிந்துரைக்கப்படுவதாக மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

ஃபுளு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?

சளி மற்றும் காய்ச்சலுடன் ஆரம்பம் ஆகும் இந்த நோய் தொற்றினால் கடுமையான உடல் வலி, தலைவலி, இருமல் போன்ற அறிகுறிகளையும் உணரலாம். குறிப்பாக இந்த வருடத்தில் ஃபுளு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு சிலருக்கு இரண்டு வாரங்கள் வரை இருமல் நீடிப்பதாக மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு நாளைக்குப் பிறகும் 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவரை ஆலோசனை செய்வது நல்லது. சரியான நேரத்தில் ஃபுளு காய்ச்சலுக்கான மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நோயின் தாக்கத்தை குறைக்கலாம்.

influenza and corona difference

கர்பிணிகளுக்கு அறிகுறிகள் மாறுபடுமா?

மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் கர்ப்பிணிகளுக்கு ஃபுளு காய்ச்சல் ஏற்பட்டால், அவை கடுமையாக இருக்கலாம் என மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். நீடித்த காய்ச்சல், கடுமையான சளி மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளை அவர்கள் உணரலாம். இதனுடன் நடுக்கத்தையும் உணர்ந்ததாக ஒரு சில கர்ப்பிணிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையை தடுக்க நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பாதுகாப்பையும் மீறி நோய் தொற்று ஏற்படும் நிலையில், ஃபுளு காய்ச்சலால் கருவில் வளரும் குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மேலும் நோயின் அறிகுறிகளை சமாளிக்க மோர், இளநீர், சூப் போன்ற திரவங்களை எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர் பரிந்துரை செய்கிறார். இதனுடன் அறிகுறிகளை புறக்கணிக்காமல் ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற அவர் வலியுறுத்துகிறார்.

பள்ளி செல்லும் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

influenca fever for kids

பள்ளியிலிருந்து வீடு திரும்பிய பிறகு முதலில் உடைமாற்றி கை, கால், முகம் கழுவிய பின்னரே வீட்டில் உள்ள பொருட்களை தொட அனுமதிக்க வேண்டும். கதவின் கைப்பிடி போன்ற நோய் பரவக்கூடிய இடங்களை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்யலாம். பொதுத் தேர்வுகளை எழுதும் மாணவர்களும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதுடன், மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது போன்ற நடவடிக்கைகளை பின்பற்றினால் நோய்வாய்ப்படுவதை தவிர்க்கலாம்.

N95 மாஸ்க் இன் தரத்தை கண்டறிவது எப்படி?

பொதுவாக N95 என்று ஆச்சிடப்பட்டிருக்கும் தரமற்ற மாஸ்க்குகள் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. விலை மலிவாக கிடைக்கும் இது போன்ற மாஸ்க்குகள் முழுமையான பாதுகாப்பு தராது. நல்ல தரமுள்ள N95 மாஸ்க் நிச்சயமாக 75 ரூபாய்க்கு கீழ் கிடைக்காது என மருத்துவர் தெளிவுப்படுத்தி உள்ளார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஃபுளூ தொற்று ஏற்படுமா?

இரண்டும் வெவ்வேறு தொற்றுநோய் என்பதால் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் ஃபுளூ காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் ஃபுளூ காய்ச்சலிலிருந்து உங்களை தற்காத்துக் கொள்ள ஃபுளூவிற்கான பிரத்தியேகமான தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். உருமாறும் இந்த ஃபுளூ வைரஸுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் வருடத்திற்கு ஒருமுறை உங்கள் மருத்துவரை ஆலோசனை செய்து ஃபுளூவிற்கான தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம். இதன் மூலம் நோய் பரவலில் இருந்து 80 சதவீதம் வரை உங்களை தற்காத்துக்கொள்ள முடியும்.

H3N2 பரவலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

வருமுன் காப்பதே சிறந்தது. ஃபுளு காய்ச்சலிலிருந்து உங்களை தற்காத்துக் கொள்ள பின்வரும் குறிப்புகளை பின்பற்றலாம்.

என்ன செய்யலாம்?

influenza pregnant women

  • இதுவரை ஃபுளு காய்ச்சலுக்கான தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், இதற்கான தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம்.
  • பொதுவாக வைட்டமின் C நிறைந்த பழங்களான திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் இது போன்ற வைட்டமின் C நிறைந்த பழங்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதே உண்மை.
  • சமூக இடைவெளியையும் கடைபிடிக்கவும். வெளியே சென்று வீடு திரும்பிய பிறகு சோப்பு பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்யவும்.
  • தரமான மாஸ்க் பயன்படுத்துங்கள்.
  • இரவு நேரத்தில் நல்ல தூக்கம் அவசியம்.
  • உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின் D ஐ இயற்கையான சூரிய ஒளியிலிருந்து பெறலாம். சிறிது நேரம் சூரிய ஒளியில் வெளிப்படுவதையும் மறவாதீர்கள்.

இந்த பதிவும் உதவலாம்: வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது நல்லதா?

என்ன செய்யக்கூடாது?

  • தேவைகளை தவிர்த்து அடிக்கடி வெளியில் செல்வதை தவிர்க்கலாம்.
  • முடிந்த வரை கூட்டம் அதிகமாக இருக்கும் பொது விழாக்களை தவிர்ப்பது நல்லது.
  • ஜங்க் உணவுகளை தவிர்க்கவும். முளைகட்டிய பயிறு, கீரை, காய்கறிகள், நட்ஸ் போன்ற ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவது நல்லது.

இதை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது மன வலிமை. நோய் வந்து விடுமோ என்ற அச்சம் அதிகரித்தால், அதுவே உங்களை பலவீனம் ஆக்கிவிடும். அச்சத்தை தவிரத்திடுங்கள்! கொரோனாவையே சமாளித்த நமக்கு H3N2 வைரஸை சமாளிப்பது கடினம் அல்ல என்ற நம்பிக்கை வார்த்தைகளை தந்த மருத்துவருக்கு மனமார்ந்த நன்றி.

மருத்துவரின் தெளிவான விளக்கங்களும், நம்பிக்கையான வார்த்தைகளும் உங்களுக்கு நிச்சயம் பயன் உள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Disclaimer