
பெண்கள் அனைவருமே உணர்வுப்பூர்வமாக நினைக்கும் பொதுவான விஷயம் என்றால் அது தங்கம் வாங்குவது தான். தலைமுறை தலைமுறையாக பாட்டியிடம் இருந்து அம்மா, அம்மாவிடம் இருந்து மகள் என கடத்தும் விஷயம் தங்கம். வீட்டில் ஒரளவு தங்கம் இருந்தாலே நாம் பொருளாதார ரீதியாக நிலையாக உள்ளோம் என்ற நம்பிக்கை இருக்கும். கடினமான சூழல்களில் உதவுவதும் தங்கம் தான். விலை மதிப்பில்லாத தங்கத்தை வாங்கும் போது சில விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும் இல்லையெனில் நாம் கஷ்டப்பட்டு சேமித்து வைத்த பணத்தில் வாங்கிய தங்கத்தை விற்க எடுத்துச் செல்லும் போது ஏமாற்றப்பட்டு இருப்பதை உணருவோம். சிறுக சிறுக சேமித்த தங்கத்தை மகளின் படிப்பு, மகளின் திருமணம் ஆகியவற்றுக்காக பயன்படுத்தலாம் என நம்பியிருப்போம். வாங்கிய தங்கம் போலியானது என தெரியும் போது இடிந்துபோக வாய்ப்புண்டு. எனவே தங்கம் வாங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தங்கம் வாங்கும் போது அதன் தூய்மையை ஆராய வேண்டும். 99.9 விழுக்காடு தூய்மை இருந்தால் அது 24 கேரட் தங்கம் ஆகும். ஆனால் 24 கேரட் தங்கத்தை வைத்து நகை செய்ய முடியாது. அதனுடன் மற்ற உலோகங்களை கலந்தே நகை செய்வார்கள். அடுத்ததாக 22 கேரட், 18 கேரட், 16 கேரட், 14 கேரட் என பல தங்கம் உள்ளது. நாம் எப்போதுமே 91.6 தூய்மையுடன் இருக்கும் 22 கேரட் தங்கத்தை வாங்க வேண்டும்.
தங்கத்தை வாங்கும் போது ஐந்து முத்திரைகள் இருக்கிறதா என பார்க்க வேண்டும். bis முத்திரை, 916 தூய்மை, ஹால்மார்க் முத்திரை, நகைக்கடையின் முத்திரை, தயாரிக்கப்பட்ட வருடம் அதில் இடம்பெற வேண்டும். இதை அனைத்தையும் பார்த்த பிறகு தங்கம் வாங்கலாம்.
வெவ்வெறு வடிவங்களில் நகை தயாரிக்கும் போது அதில் கல் பதிப்பார்கள். உதாரணமாக 22 கேரட் தங்கம் ஒரு கிராம் விலை 6 ஆயிரம் ரூபாய் என்றால் கல் வைத்த காதணி நகையில் மூன்று கிராம் தங்கமும், ஒரு கிராம் கல் இருக்கும். ஆனால் நான்கு கிராம் தங்கத்திற்கும் விலை கொடுக்க வேண்டும். மூன்று கிராம் தங்கத்தின் விலை 18 ஆயிரம் ரூபாய். ஆனால் ஒட்டுமொத்த எடைக்காக 24 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். இதனால் முடிந்தவரை கல் வைத்த நகைகளை தவிர்க்கவும்.
20, 30 வருடங்களுக்கு முன்பாக நகை ஆசாரி தங்கத்தை நெளித்து வெட்டும் போது விரயம் ஏற்படுவதாக சொல்லி சேதாரத்தையும் விலையில் சேர்ப்பார்கள். நகையின் வடிவமைப்பை பொறுத்து சேதாரம் ஐந்து விழுக்காட்டிற்கு மேல் இருக்கும். நான்கு கிராம் தங்கத்தின் விலைக்கு பத்து விழுக்காடு சேதாரம் போட்டால் கூடுதலாக 2 ஆயிரத்து 400 ரூபாய் கொடுக்க வேண்டும். தற்போது மெஷின் பயன்படுத்தி நகைகள் வடிவமைக்கப்படுகின்றன. எனினும் பிடித்தமான நகைகளை அளவுகொடுத்து செய்ய சொல்லும் போது சேதாரம் குறைவாக உள்ள கடைகளை தேர்ந்தெடுத்தால் நல்லது.
நுட்பமான வடிவமைப்புகளுக்கு ஆசாரிகள் செய்கூலி கேட்பார்கள். ஒரு கிராமுக்கு 200 என்றால் நான்கு கிராமுக்கு 800 ரூபாய் வாங்கும் நகையில் சேர்க்கப்படும். எனவே செய்கூலி, சேதாரம் இல்லாத நகைகளை வாங்க முயற்சிக்கவும்.
அதே போல பழைய நகையை கொடுத்து புதிய நகையை வாங்கும் போது அதே கடையில் நகையை மாற்ற முயற்சிக்கவும். புதிய கடையில் நகையை மாற்றினால் ஒரு விழுக்காடு சார்ஜ் செய்வார்கள். மேலும் கல், நகையில் இருக்கும் அழுக்குகளை உருக்கி நகையை எடை போடுவதால் நஷ்டத்தை அறிந்து கொண்டு கல் வைத்த நகைகளை தவிர்க்கவும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com