குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது தாய் சேய் இருவருக்கும் நல்லது. குழந்தையின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்யவும், நோய் தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதற்கான எதிர்ப்பு சக்தியை வளர்க்கவும், அலர்ஜி, ஆஸ்துமா, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை தடுக்கவும் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியம்.
இது உங்கள் மன அழுத்தத்தை குறைத்து மனநிலையை மேம்படுத்துகிறது. குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா தாய்மார்களுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சிலருக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரப்பதில் சிக்கல்கள் இருக்கலாம். இதுபோன்று பிரச்சனையால் நீங்களும் சிரமப்படுகிறீர்கள் என்றால், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க கூடிய இயற்கையான உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: கிராம்பு சாப்பிட்டால் இத்தனை நோய்களை குணப்படுத்த முடியுமா?
இந்த உணவுகள் பற்றிய தகவல்களை உணவியல் நிபுணர் மனோலி மேத்தா அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். தாய்ப்பாலை இயற்கையாக அதிகரிக்க கூடிய உணவுப் பொருட்கள் பின்வருமாறு.
1. ராகி
ராகியில் கால்சியம் மற்றும் வைட்டமின் D நிறைந்துள்ளது. இது எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுவதோடு மட்டுமின்றி, தாய்மார்களின் ஹீமோகுளோபின் அளவுகளையும் அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள அமினோ அமிலங்கள் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும்.
ராகியில் அதிக அளவு உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள டிரிப்டோபன் எனும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைக்க உதவுகிறது.
2. எள்
எள்ளில் கால்சியம், தாதுக்கள் மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளன. இவை பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கின்றன.
3. தண்ணீர் விட்டான் கிழங்கு ( அஸ்பாரகஸ்)
பிரசவம் முடிந்து தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டத்தில் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். இந்நிலையில் உங்கள் ஹார்மோனை சமநிலைப்படுத்த தண்ணீர் விட்டான் கிழங்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது ப்ரோ லாக்டின் அளவுகளை அதிகரித்து தாய்ப்பால் சுரப்பை மேம்படுத்துகிறது. இதனுடன் மன அழுத்தத்தையும் போக்கலாம்.
4. சோம்பு
இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும், செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது . சொம்பில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. இவை ஒரு பெண்ணின் உடலால் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன் ஆகும்.
5.வெந்தயம்
வெந்தயத்தில் உள்ள பண்புகள் தாய்ப்பால் சுரப்பை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றன. இதற்கு வெந்தயத்தை ஊற வைத்து குடிக்கலாம் அல்லது நெய்யில் வறுத்த வெந்தய பொடியை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து தினமும் குடிக்கலாம். இது உங்களுக்கு சிறந்த பலனை தரும்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த ஒரு முத்திரை உங்கள் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்
6. பாதாம் பிசின் லட்டு
இது தாய்மார்களின் தாய்ப்பாலை மேம்படுத்தும் பூஸ்டர் என்றும் சொல்லலாம். சுத்தமான பசு நெய், சர்க்கரை, உலர்ந்த திராட்சை, உலர் பழங்கள் மற்றும் பாதாம் பிசினை கொண்டு இந்த லட்டு தயாரிக்கப்படுகிறது. இது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும், கலோரிகளையும் வழங்குகிறது. இதனுடன் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும் பாதாம் பிசின் லட்டுக்களை சாப்பிடலாம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik