பொதுவாக சர்க்கரை நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க, பகலில் என்னென்ன விஷயங்களை செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்திருப்பார்கள். பகல் நேரத்துடன் ஒப்பிடும்பொழுது, இரவு வழக்கத்தில் பெரும்பாலானவர்கள் அதிக கவனம் செலுத்துவதில்லை. ஆனால் இரவு வேளையிலும் நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிப்பது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க அவசியமானது. எனவே சூரியன் மறைந்தவுடன் ஒரு சில விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் மறுநாளும் உங்கள் இரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கலாம்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் சிறுநீரகம் மற்றும் இதய நோய் போன்ற பல கடுமையான உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: இயற்கையான சூரிய ஒளி உங்களுக்கு ஏன் நல்லது தெரியுமா?
பல காரணங்களினால் உங்கள் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம். குறிப்பாக இரவு தூங்க செல்வதற்கு முன் நீங்கள் என்ன உணவு சாப்பிடுகிறீர்கள்? எவ்வளவு சாப்பிடுகிறீர்கள்? என்பதை பொறுத்து உங்கள் இரத்த சர்க்கரையின் அளவில் மாற்றங்கள் ஏற்படலாம். எனவே இரவிலும் சரியான உணவு முறை மற்றும் வழக்கத்தை கடைபிடிப்பது நல்லது.
நீங்கள் இரவு தூங்குவதற்கு முன் எந்த மாதிரியான வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்று குழப்பமாக உள்ளதா? கவலை வேண்டாம். உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க ஊட்டச்சத்து நிபுணர் லாவ்னீத் பத்ரா அவர்கள் பரிந்துரை செய்த இரவு நேர வழக்கத்தை நீங்கள் பின்பற்றலாம். அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க நல்ல தூக்கம் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த பின்வரும் இரவு வழக்கத்தை முயற்சிக்கலாம்.
1 கப் சீமை சாமந்தி டீ
நீங்கள் இரவில் சரியாக தூங்கவில்லை என்றால் உங்கள் உடல் இன்சுலினை சரியாக உற்பத்தி செய்யாது. இதனால் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம். எனவே நல்ல தூக்கத்தை பெற சீமை சாமந்தி டீ குடிக்கலாம்.
இந்த டீ இல் துவர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இந்த பண்புகள் அனைத்தும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகின்றன. சீமை சாமந்தி டீ யில் கஃபீன் இல்லாததால், இதை சர்க்கரை நோயாளிகளுக்கு மருத்துவர்களும் பரிந்துரை செய்கிறார்கள்.
7 ஊறவைத்த பாதாம்
பாதாம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல மூளைக்கும் மிகவும் நல்லது. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் டிரிப்டோபான் நல்ல தூக்கத்தைப் பெற உதவுகின்றன. மேலும் இரவில் ஏற்படும் அதிக பசி ஆர்வத்தை குறைக்கின்றன.
மேலும், மெக்னீசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது டைப் -2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கும். இதனுடன் பாதாம் சாப்பிடுவதன் மூலம் உணவுக்குப் பிறகு அதிகரிக்கும் இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்படுத்தலாம்.
1 டீஸ்பூன் ஊறவைத்த வெந்தயம்
வயிறு மற்றும் மூட்டு வலிக்கு அமுதமாகக் கருதப்படும் வெந்தயம், உடலின் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் உள்ள பண்புகள் சர்க்கரை நோயை எதிர்க்கும் மருந்தாக செயல்படுகிறது. இது உணவுக்கு முந்தைய இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, குளுக்கோஸ் சகிப்புத்தன்மையை மேம்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: கிராம்பு சாப்பிட்டால் இத்தனை நோய்களை குணப்படுத்த முடியுமா?
15 நிமிடங்கள் வஜ்ராசனம்
உணவுக்குப் பிறகு இந்த ஆசனம் செய்வதால் வயிறு சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அது மட்டுமின்றி இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ளவும் வஜ்ராசனம் செய்யலாம்.
உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வரை வைத்திருக்க நிபுணர் பரிந்துரை செய்த இந்த இரவு வழக்கத்தை கடைபிடிக்கலாம். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik